Monday, April 7, 2014

இன்னுமோர் உலகம்….

இன்றும்


உண்டு களித்து

உறங்கி விழித்து

கொண்டிருக்கிறது

இன்னுமோர் உலகம்….



எங்கோ தூரத்தில்

அபலைப் பெண்ணின்

அழுகுரல்

காதில் நாராசமாய்

ஒலிக்கிறது…..



அது

காவல் நிலையமோ

கன்னிச் சாவடியோ

கணவன் வீடோ

எதுவாயும் இருக்கலாம்…..



ஏதோ ஓரிடத்தில்

இளைய சக்தி

இணைய சகதிக்குள்

புரண்டுருண்டு

புழுவாய் நெளிந்து

கொண்டிருக்கிறது…..



அது

முகநூலோ

டிவிட்டரோ

யூ ட்யுபோ

எப்படியும் இருக்கலாம்…..



நிதமும் ஒரு தருணத்தில்

சாலையின் சந்தடியில்

உயிர் துடித்திருக்க

சண்டித்தனம் செய்து

வண்டிகள் நகர

மறுத்து நிற்கின்றன…..



அது

பட்டபகலோ

நட்டநடு நிசியோ

பாதி நாளோ

எந்நேரமும் இருக்கலாம்….



எப்போதும்

என் பார்வையில்

அன்றே உலகம்

அழிந்துவிடுமென்பது போல்

அவசர கதியில்லேயே

பறந்துகொண்டிக்கிறான்

மனிதன்….



அவன்

பாமரனோ,

படித்தவனோ

பரதேசியோ

பணக்காரனோ

எவனாயும் இருக்கலாம்….



காலத்தின் தொண்டையில் சிக்கிய

ஏதோவொரு நிமிடத்தில்

தேவையின்றி

தூக்கி எறியப்படும் உணவோ

கேள்வியின்றி

கிழித்தெறியப்படும் தாளோ

ஆதரவின்றி

வெட்டிஎறியப்படும் மரமோ

அவசியமின்றி

வாரியிரைக்கப்படும் நீரோ

ஏளனமாய் சிரித்த வண்ணமுள்ளது…..



எது

எப்படி ஆயினும்

யார்

எப்படி போயினும்

இன்றும்

உண்டு களித்து

உறங்கி விழித்து

கொண்டுதானிருக்கிறது

இன்னுமோர் உலகம்….

No comments:

Post a Comment